Saturday 2 March 2013


நெருக்கடிகளின் காலம்  - நிஷா

இந்நிகழ்வுகள் என்னை குழப்பக்கயிற்றிலிருக்கி
கேள்விகளின் திரியைத் தூண்டி
ஸ்திரமின்மையின் கூரிய அலகுகளால்
கொத்திக்கொத்தி சலனப்படுத்தி அலைக்கழிக்கின்றன

கருத்துக்களேதுமற்ற வறண்ட புன்னகைகளை
ஒரு தோளிலும்
கடிவாளக் குதிரையின் முரட்டு மனப்புணர்ச்சியின் வெறியை
மற்றொரு தோளிலும்
சுமந்துகொண்டு திரிகிறேன்

திரையரங்குகளிலிருந்து வெளிவரும் சவங்களின் கண்களில்
குழந்தைகள் கர்ப்பமுறும் காட்சிகளின் கோரபிம்பம்
பலவர்ணப் கலவைகளால் சூழப்பட்ட முகங்கள்
தலைவர்களின் புன்னகையில் கொக்கரிக்கின்றன

கனவுகளில் வந்து ஆர்ப்பரிக்கின்ற
தலையில் காளான்முளைத்த ஜந்துக்கள்
நம் வாயிற்கதவைத் தட்டும்நாள்
வெகுதூரத்திலில்லை

எலிப்புழுக்கைகள் செவ்வெரும்புக்கூட்டங்கள் மற்றும்
பருத்த கொசுக்களென
ஒரு மாபெரும் ஆஷ்ட்ரேவாகிவிட்ட
என் சிற்றறை
நாளாக நாளாக குறுகிக்கொண்டே வருகிறது,
ஒரு சவப்பெட்டியின் வடிவில்..!!

சுவடு-1997

No comments:

Post a Comment